நிறுவன அளவிலான குறைப்புகளில் சுமார் 3% பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட்

மைக்ரோசாஃப்ட் பெருநிறுவனம் தமது ஊழியர்களில் 6,000 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்து உள்ளது.
இந்த எண்ணிக்கை அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3% குறைவு என்று மைக்ரோசாஃப்ட் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.
“மாற்றம் கண்டு வரும் சந்தை நிலவரத்திற்கு இடையே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சிறப்பானதொரு இடத்தில் நிலைநிறுத்தத் தேவைப்படும் நிர்வாக ரீதியிலான மாற்றங்களை தொடர்ந்து செய்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் 10,000 பேரை ஆட்குறைப்பு செய்தது. அதன் பிறகு அந்நிறுவனம் மேற்கொள்ளும் பெரிய ஆட்குறைப்பு இது.
2024 ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உலகளவில் 228,000 பேர் வேலை செய்தனர். அவ்வப்போது ஆட்குறைப்பு செய்வதோடு ஊழியர்களின் பொறுப்புகளையும் மாற்றி வருகிறது அந்நிறுவனம்.
தற்போதைய ஆட்குறைப்பால் வாஷிங்டன் நகரின் ரெட்மான்ட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் பணியாற்றும் 2,000 பேர் பாதிக்கப்படுவர்.
6,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதை செவ்வாய்க்கிழமை (மே 13) மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.
ஆட்குறைப்பு நடவடிக்கை அதிலிருந்து இரண்டு மாதத்தில், அதாவது ஜூலை 13 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.