மனித திசுக்களில் மைக்ரோபிளாஸ்டிக் : ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
ஆண்குறிகளில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் விஞ்ஞானிகள் பாலியல் ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அறிவியல் இதழான நேச்சரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இது தொடர்பான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்த ஆறு ஆண்களின் திசுக்களை மதிப்பீடு செய்ததில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 80% மாதிரிகளில், ஏழு வகையான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆண்குறி திசுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிவது பாலியல் ஆரோக்கியத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்த விசாரணைகளை எழுப்புகிறது” என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக்களில் கிட்டத்தட்ட பாதி பாலிஎதிலீன் டெரெப்தாலேட் ஆகும், இது பொதுவாக உடைகள் மற்றும் உணவு மற்றும் பான பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
மனித திசுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், ஆண் பாலின ஆரோக்கியத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்துவதன் மூலம், மனித ஆரோக்கியத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் விளைவுகள் பற்றிய தற்போதைய உரையாடலுக்கு எங்கள் ஆராய்ச்சி ஒரு முக்கிய பரிமாணத்தை சேர்ப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று அல்லது வெறுமனே தொடுவதன் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்லும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான பிளாஸ்டிக்குகள் முதலில் 2022 ஆம் ஆண்டு இரத்தத்தில் கண்டறியப்பட்டன. மேலும் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் மாசுபாட்டை மிகவும் கடுமையான நிலைமைகளுடன் இணைக்கின்றன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இரத்த நாளங்களில் மைக்ரோபிளாஸ்டிக் உள்ள நோயாளிகள் பக்கவாதம், அகால மரணம் அல்லது மாரடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.