எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்று: பிரதமர் மோடி புகழஞ்சலி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலகிலுள்ள எம்.ஜி.ஆர் . ரசிகர் மன்றத்தினராலும் பல நாடுகளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் விடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.
தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது.
சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.” – என்று அதில் கூறப்பட்டுள்ளது.
1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பிறந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் தமிழக அரசியலைத் தீர்மானித்த ஒரு பெரும் வரலாற்றுப் பாத்திரமாக உருவெடுத்தார்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் போலவே ஆரம்பமானது. வறுமை,இடம்பெயர்வு, போராட்டம்—இவை அனைத்தையும் கடந்து, அவர் கலையுலகில் கால்பதித்தார்.
சினிமாவில் அவர் எடுத்த பாத்திரங்கள் வெறும் நடிப்பு அல்ல; அது ஏழை எளிய மக்களின் கனவுகளின் பிரதிபளிப்பாக அமைந்தது.
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகன், ஏழையின் பக்கம் நிற்கும் மனிதன்—இந்த உருவமே எம்.ஜி.ஆரை “நடிகர்” என்ற வரம்பைத் தாண்டி “மக்களின் மனிதர்” ஆக மாற்றியது.





