ஹிஜாப் அணிவதை எதிர்க்கும் ஈரானியப் பெண்களுக்கு `மனநல சிகிச்சையகம்’: ஈரான் அரசு அதிரடி
ஹிஜாப் அணிவதை எதிர்க்கும் ஈரானியப் பெண்களுக்கு தெஹ்ரானில் உள்ள சிறப்பு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதற்காக ஹிஜாப் சிகிச்சை கிளினிக் நிறுவப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.
இந்த கிளினிக்குகள் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த திட்டம் “கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப்” ஆகியவற்றை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும், வருகை “விரும்பினால்” இருக்கும் என்றும் கூறினார்.
இந்நிலையில் ஈரான் அரசின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஈரான் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹுசைன் ரைசி கூறுகையில், “ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைப்பது என்பது ஈரான் சட்டத்திற்கு மட்டுமின்றி இஸ்லாமிய சட்டத்திற்குமே எதிரான ஒன்று” என்று அவர் தெரிவித்தார்.