விலைபோகாத தலைவரே மாவை: திருவுருவச் சிலையை திறந்து வைத்து ஆளுநர் உரை!
“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா Mavai.C.Senathirasa பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர்.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N.Vedhanayagan புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி திருவுருவச் சிலை வடக்கு மாகாண ஆளுநரால் இன்று சனிக்கிழமை காலை (31.01.2026) திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.





