மாலியில் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு – பகல், இரவாக வரிசையில் நிற்கும் மக்கள்!

மாலியில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் பலரும் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) இன் போராளிகள் மாலிக்கு வரும் எரிபொருள் தாங்கிய வண்டிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரியளவு முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பமாகோவில் (Bamako) உள்ள வங்கி ஊழியரான அமடோ பெர்த்தே என்ற நபர் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி குறித்து பின்வருமாறு விளக்கியுள்ளார்.
“நான் எனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக டாக்ஸியில் 20 கிலோமீற்றர் பயணம் செய்தேன். இருப்பினும் வரும் வழியில் டாக்ஸியும் பெட்றோல் இன்றி இடையில் பழுதடைந்தது. சுமார் 20இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றுள்ளேன். எங்கேயும் எரிபொருள் கிடைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்நாட்டில் உள்ள எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்கள் ஊழியர்களையும் வணிகங்களையும் பாதுகாக்க நாட்டிற்கு எரிபொருளைக் கொண்டுவருவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள மாலி நாடானது, பொருளாதார ரீதியாக கடுமையாக பின்தங்கியுள்ளது. அந்நாட்டு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.