செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி பாரிய விபத்து : நால்வர் பலி!
செக் குடியரசில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ப்ராக் நகருக்கு கிழக்கே 62 மைல் (100 கிமீ) தொலைவில் உள்ள பார்டுபிஸ் நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அதிவேக பயணிகள் ரயில் தனியார் ரெஜியோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உள்துறை அமைச்சர் விட் ரகுசன் தெரிவித்தார்.
காயம் அடைந்தவர்கள் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் மார்டின் குப்கா, அதிகாரிகள் மோதல் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ப்ராக் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதிக்கு இடையேயான பிரதான பாதை மூடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





