வர்த்தக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ள மார்கோ ரூபியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை கோலாலம்பூரில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வது இது முதல்முறை.
பதவியேற்றதை அடுத்து முதல் முறையாக ஆசியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் ரூபியோ, கோலாலம்பூரில் 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியானின் வெளியுறவு அமைச்சர்களையும் மூத்த மலேசிய அதிகாரிகளையும் சந்தித்தார். அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ்வையும் சந்தித்துப் பேசினார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தின்மீது அமெரிக்காவின் கவனத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாக ரூபியோவின் பயணம் அமைந்துள்ளது.ரூபியோ கிழக்காசிய உச்சநிலைச் சந்திப்பிலும் ஆசியான் வட்டார உச்சநிலைச் சந்திப்பிலும் கலந்துகொள்கிறார். அதில் ஜப்பான், சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் என பல தரப்புகள் கலந்துகொள்கின்றன.
சீனாவைவிட அமெரிக்கா இன்னும் சிறந்த பங்காளி நாடு என்பதைச் சந்திப்பின்போது ரூபியோ வலியுறுத்துவார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரூபியோ வாங்கைச் சந்திக்கிறார். அடுத்த மாதம் தனது பொருள்கள்மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டாம் என்று அமெரிக்காவை சீனா இந்த வாரம் எச்சரித்தது.
சீனாவின் விநியோகத் தொடர்களைத் துண்டித்துக்கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு செய்துகொள்ளும் நாடுகள்மீது பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா குறிப்பிட்டது.அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்ட சீனாவுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்புடன் கைகோக்கும் நாடுகள்மீதும் கூடுதலாக 10 விழுக்காட்டு வரியை விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் இதற்குமுன் எச்சரிந்திருந்தார்.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளிப்பது குறித்தும் திரு வாங்கிடம் கேட்கவிருப்பதாகத் ரூபியோ கூறியிருந்தார்.“சீனா வெளிப்படையாக ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கிறது. முடிந்த அளவுக்கு மாட்டிக்கொள்ளாமல் ரஷ்யாவுக்கு உதவவும் சீனா தயாராக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.