மாயாஜால தேன் எனக்கூறி லட்சங்களை சுருட்டிய ஆசாமி கைது!
துருக்கியில் உள்ள குகையில் இருந்து பெறப்பட்ட அரிய வகை தேன் எனக் கூறி 15 லட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பு) விற்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் காரத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அசோக், தன்னை சாமியார் என்றும் ஜோதிடர் என்றும் கூறிக் கொண்டு மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணொருவர் கடந்த வாரம் நாசிக் காவல்துறையில் அசோக் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு செய்தார்.
இதன் அடிப்படையில் பொலிஸார் அசோக்கை கைது செய்தனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“அவர் துருக்கியிலிருந்து கிடைக்கும் அரிய வகை ‘எல்விஷ்’ வகை தேன் என்று கூறி ஒரு கிலோவை 15 லட்சத்துக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது ஒரு மாயாஜால தேன் என்றும், இதைச் சாப்பிட்டால் இளமையாக மாறிவிடலாம் என்றும் கூறியுள்ளார்.
நானும் இதைக் குடித்துப் பார்த்தேன். நீங்களும் இதைக் குடித்து பலன் பெறுங்கள் என்று தன்னிடம் வந்தவர்களிடம் கூறி அவர் ஏமாற்றியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிர அரசியல்வாதிகளும் இவருடைய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
இந்த எல்விஷ் வகை தேன் ஒரு கிலோ 9 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இது துருக்கியின் ஆர்ட்வின் நகரிலுள்ள 1,800 மீட்டர் ஆழத்திலுள்ள குகையிலிருந்து எடுக்கப்படுகிறது.
அந்தப் பெயரைக் கூறி இவர் ஏராளமான தேன் வகைகளை இங்கு விற்று பலரை ஏமாற்றியுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் பொலிஸ் காவலில் எடுத்துள்ளோம். அவரது வீடு அருகே துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.




