H-1B விசா கட்டண உயர்வு – ட்ரம்பின் முடிவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதிக்கும் என்றும் கூட்டாட்சி சட்டத்தை மீறும் என்றும் கூறி அமெரிக்க வர்த்தக சபை வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த திட்டத்தினால் அமெரிக்காவில் தொழில்வாய்ப்புகளைப் பெறுபவர்கள் கணிசமாகக் குறைவார்கள் எனவும் இதனால் அமெரிக்க முதலாளிகளுக்கு, குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வர்த்தக சபையின் துணைத் தலைவரும் தலைமை கொள்கை அதிகாரியுமான நீல் பிராட்லி (Neil Bradley) கூறியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில் அக்கட்சியின் ஒப்புதல் இன்றி கட்டணத்தை உயர்த்த ட்ரம்பிற்கு அதிகாரம் இல்லை என்றும் வர்த்தக சபை வாதிட்டுள்ளது.
“இந்த பிரகடனம் தவறான கொள்கை மட்டுமல்ல. இது வெளிப்படையாக சட்டவிரோதமானது” என்றும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதில் ஜனாதிபதிக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் உள்ளது, ஆனால் அந்த அதிகாரம் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் காங்கிரஸால் இயற்றப்பட்ட சட்டங்களை நேரடியாக மாற்ற முடியாது எனவும் வர்த்தக சபை குறிப்பிட்டுள்ளது.