உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: ஏப்ரல் 9 சபையில் விவாதம்!
நாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று நாடாளுமன்றம் கூடாது.
2026 ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.




