ராப் பாடல் விவகாரம்- குற்றவாளியை திறந்தவெளி சிறைக்கு மாற்ற தடை
பிரித்தானியாவில் 16 வயது ஜிம்மி மிசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜேக் ஃபஹ்ரியை திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கு நீதித்துறை செயலாளர் டேவிட் லம்மி (David Lammy) தடை விதித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஜிம்மி மிசனை கொலை செய்ததற்காக ஃபஹ்ரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுப்பு பாத்திரம் ஒன்றை எறிந்ததில் அது உடைந்து, மிசனின் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளம் துண்டிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
2023 ஆம் ஆண்டு ஃபஹ்ரி உரிமத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜனவரியில், “டென்” என்ற பெயரில் ராப் இசை வெளியிட்டதாகக் கூறி, நீதி அமைச்சகம் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்தது.
அந்த பாடல்கள் கொலை சம்பவத்தை நினைவுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மாதம் தொடக்கத்தில் பரோல் வாரியம், ஃபஹ்ரியை மீண்டும் விடுவிக்காமல், திறந்தவெளி சிறைக்கு மாற்ற பரிந்துரைத்தது.
ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பரிந்துரையை நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி நிராகரித்துள்ளார்.
நீதி அமைச்சகத்தின் படி, இந்த தலையீடு பொதுப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டது.
பரோல் வாரியம், ஆரம்பத்தில் தனது பாடல்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது என்று ஃபஹ்ரி மறுத்ததாகவும், பின்னர் தான் “டென்” என்ற கலைஞர் பெயரில் பாடல்கள் வெளியிட்டதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தது.
மேலும், தனது நன்னடத்தை அதிகாரியிடம் இசை வெளியிட்டதை தெரிவிக்காதது உரிம விதிகளை மீறியது என்றும் கூறியது.
இதனிடையே, ஜிம்மி மிசனின் தாயார் மார்கரெட், லாமியின் முடிவை வரவேற்றார். பரோல் வாரியத்தின் ஆரம்ப பரிந்துரை தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக அவர் கூறினார்.
“அவர் தனது வாழ்க்கையை மாற்றியிருப்பார் என்று நான் நம்ப விரும்பினேன். ஆனால் அவர் மாறவில்லை என்பது வருத்தமளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிபிசி 1எக்ஸ்ட்ராவில் டென் பெயரில் வெளியான இரண்டு பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அவை ஒளிபரப்பப்பட்ட நேரத்தில், அந்த கலைஞரின் பின்னணி குறித்து பிபிசிக்குத் தெரியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.





