கர்நாடகா – தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மகள்… குத்திக் கொலை செய்த தாய்!
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் கண்டித்த தாயை மகள் கத்தியால் குத்திய நிலையில், அந்த கத்தியைப் பறித்து தாய் மகளைக் குத்தினார். இதில், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் பத்மஜா(40). இவரது மகள் சாஹிதி(19). இவர் சமீபத்தில் கர்நாடகா மத்யமிகா வித்யா (பியூசி) தேர்வுகளை எழுதினார்.
இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் இலக்கியத்தில் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால், இது குறித்து மகளிடம் தாய் பத்மஜா விசாரித்தார். அத்துடன் மதிப்பெண் குறைந்ததற்காக மகள் சாஹிதியை, பத்மஜா கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாஹிதி, வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து அவரது தாய் பத்மஜாவை நாகு முறை குத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மஜா, மகளைத் தாக்கினார். அத்துடன் மகள் கையில் இருந்த கத்தியைப் பறித்து குத்த ஆரம்பித்தார். இதில் படுகாயமடைந்த சாஹிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த பத்மஜாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மகளை தாயே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.