நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் ‘இந்தியன் 3’ படம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் பரவி வந்தது.
அதுமட்டுமல்லாமல், ‘இந்தியன் 3’ திரைப்படத்திற்காக கூடுதலாக 40 நாட்கள் கமல் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா பகுதிகளில் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘இந்தியன் 3’ படம் உருவாகவுள்ளதை கமல் உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய கமல், “இந்தியன் 2, இந்தியன் 3 வெளியாகும் பொழுது அது ஒரு அரசியல் மேடையாக மாறும். அதையெல்லாம் பார்க்க வேண்டும். அதில் செய்திகள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.