Tamil News

சினிமாவில் சாதித்தால் முதல்வர் ஆகிவிட முடியாது: விஜய் குறித்து கி.வீரமணி சுளீர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக மேலோட்டமாக பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய்யின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போல் இருந்து வருகின்றன.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

எப்போதுமே பொதுத் தொண்டு செய்து வர வேண்டும். கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சுலபம். ஒருவர் இருந்தால் கூட போதும். தேர்தலில் நிற்கும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும். அரசியல் சட்டப்படி, தேர்தலில் நிற்க பைத்தியக்காரனாக இருக்கக்கூடாது. இந்த 2 தகுதியும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் கெட்டிக்காரர்கள். சினிமா துறையில் கெட்டிக்காரராக இருப்பதால், உடனே முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்பது வேடிக்கை.

மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை உணர்ந்த சிலர் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆசைகள் குதிரைகள் இருந்தால் அதில் சவாரி செய்யலாம். அந்த குதிரைகள் பல நேரங்களில் மண் குதிரைகளாக மட்டுமல்ல, பொய்க்கால் குதிரைகளாகவும் இருந்துவிடும்.

அடிப்படைத் தகுதி என்பது வேறு. கொள்கை, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய லட்சியப் பயணம், அதில் ஏற்படும் தடைகளைத் தாண்டி முன்வைத்த வியூகங்கள், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் ஆற்றல் எல்லாம் சேர்ந்து கருணாநிதியை தலைவர் ஆக்குகிறது.

மக்களின் நம்பிக்கை அவரை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அவர்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் என அரசியலுக்கு வரவில்லை. அவர் சினிமாவில் வசனம் எழுதியது கூடுதல் தகுதி, அவர் அடிப்படையில் அரசியல் தலைவர் என்றார்.

 

Exit mobile version