K-Pop மோகம்! பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக தென் கொரியாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்

K-Pop கலாச்சாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்கம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தேடும் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது.
தென் கொரியா, இப்போது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக உலகம் முழுவதும் இருந்து மக்கள் வரும் முக்கிய மருத்துவ சுற்றுலா மையமாக வளர்ந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு மட்டும் 1.17 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் சிகிச்சை பெற அந்த நாட்டை நாடியுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 11.5 சதவீதமானோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
Bloomberg வெளியிட்ட தகவலின்படி, தென் கொரியாவின் K-Pop கலைஞர்கள், நடிகர்களின் தோற்றம் பலரை பெரிதும் ஈர்க்கின்றது. ரசிகர்கள், அவர்களைப்போல் அழகாகத் தோன்றும் ஆசையுடன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாடுகின்றனர்.
இதோடு, தென் கொரியாவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதும், அரசு மருத்துவ சுற்றுலா விசா வழங்குவதும், பயணிகள் வரியைத் திரும்பப் பெறும் வசதியும் இந்த மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கின்றன.
மேலும், சிகிச்சை செலவு, மருத்துவமனைகள், மருத்தவர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால், பயணத்தை திட்டமிடுவது சுலபமாகியுள்ளது.
இத்தனை வசதிகளுடன் கூட, சில சிக்கல்களும் உள்ளன. முறையான அனுமதியில்லாத மருத்துவர்கள் சிலர் இந்தத் துறையில் செயல்படுவதால், அறுவை சிகிச்சையில் தவறுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதனால், சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் மருத்துவமனை, மருத்துவர் அனுபவம், அங்கீகாரம் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்துத் தீர்மானிக்க வேண்டியது முக்கியம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.