வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!
வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.
உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் அந்நாட்டு மக்களுக்கே உண்டு.
அதனை மீறுவதற்கு எந்தவொரு பலவானுக்கும் உரிமை இல்லை.
நவீன சமூகமும் அரச ஆளுகையும் மிகவும் நாகரிகமுள்ளதாக அமைய வேண்டுமென்பது பொதுவான ஏற்றுக்கொள்ளலாகும்.
ஜனநாயகம், மனித உரிமைகள், அரசுகளின் சுதந்திரம் மற்றும் சுயாதீனத்தன்மை முழு உலகும் ஏற்றுக்கொள்கின்ற கோட்பாடுகளாகும்.
எந்த காரணத்தின் பேரிலும் அவற்றை மீறி, நாடுகள் மீது இராணவ ரீதியான இடையீட்டினை செய்வதோ அல்லது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதோ நவீன நாகரிக உலகத்தில் நியாயமானதாக அமையமாட்டாது.
அத்தகைய நிலைமைக்குள் ஐக்கிய அமெரிக்காவினால் வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவ இடையீட்டினை உலகில் எவருமே அனுமதிக்க போவதில்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்.
எனவே, ஐக்கிய அமெரிக்காவினால் வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ ரீதியான ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.
மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாங்கள் வெனிசுவேலாவின் தன்னாதிக்க வழியுரிமைக்காகவும் சுயாதீனத் தன்மைக்காகவும் குரல் கொடுக்கிறோம்.” -என்றுள்ளது.





