60 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஜப்பான் – திணறும் மக்கள்
ஜப்பான் ஆண்டுக்கு 60 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்கத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் சுற்றுப்புறத் துறைத் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சரியான முயற்சியின் மூலம் அதைச் சாதிக்க முடியும் என்று அவர் உறுதிபட நம்புகிறார்.
ஜப்பானுக்குச் சென்ற ஆண்டு சுமார் 25 மில்லியன் வெளிநாட்டினர் சென்றனர். சிங்கப்பூர், தென்கொரியா, அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து அதிகமானோர் சென்றனர்.
இருப்பினும் அதிகரிக்கும் சுற்றுப்பயணிகளால் உள்ளூர்வாசிகளுக்கு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளிநாட்டினர் சில நேரங்களில் ஒழுங்கீனமாக, இங்கிதம் இல்லாமல் நடந்துகொள்வதாக அவர்கள் குறைகூறுகின்றனர்.
ஜப்பானின் மேற்குப்பகுதி நகரான ஹிமேஜி (Himeji) அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
ஹிமேஜி அரண்மனையில் பலர் ஏறி இறங்கினால் அதன் பழைமையான மரம் நொறுங்கிப் போகும் என்று அஞ்சப்படுகிறது. மற்றோர் இடமான மவுண்ட் புஜியில் (Mount Fuji) அண்மையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தடுப்பு ஒன்று எழுப்பப்பட்டது.
கமராவுடன் படமெடுக்கச் சுற்றித் திரியும் சுற்றுலாப் பயணிகளின் தொல்லை தாங்க முடியாமல் அந்த முயற்சி எடுக்கப்பட்டதாய் அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர்.