விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ‘ஜனநாயகன்’ ரிலீஸ் அதிகாரப்பூர்வமாகத் தள்ளிவைப்பு!
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) தை 9 2026 உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்துடனான (CBFC) சட்டப் போராட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு தள்ளிப்போனது போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
படத்தைத் தயாரித்துள்ள கெவின் தயாரிப்பு நிறுவனம் (KVN Productions ), இன்று மாலை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

https://x.com/KvnProductions/status/2008948308019228687
“கனத்த இதயத்துடன் இந்தத் தகவலைப் பகிர்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டையும் மீறிய சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தள்ளிவைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.”
படத்தின் தணிக்கைக்காக விண்ணப்பித்தபோது, ஒரு உறுப்பினர் அளித்த ‘மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது’ என்ற புகாரால் சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியம் மறுத்தது.
அதை எதிர்த்துத் தயாரிப்பாளர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இன்று தை 7 நடைபெற்ற நீண்ட விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, தனது தீர்ப்பை ஜனவரி 9-ம் தேதி காலைக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு படரிலீஸ் அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வருவதால், அதற்குள் தணிக்கைச் சான்றிதழ் பெற்று, தியேட்டர்களுக்குப் படங்களை அனுப்பி (KDM), ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல இடங்களில் முன்பதிவு (Advance Booking) தொடங்கிவிட்ட நிலையில், திடீரெனப் படம் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறவிருந்த பிரீமியர் ஷோக்களும் (Premier Shows) ரத்து செய்யப்பட்டுள்ளன.





