விஜய்யை கட்டிப்பிடித்து முத்தமிட்ட அட்லீ – மலேசியாவில் உருக்கமான தருணம்!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் திருவிழாவைப் போல நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினமே படக்குழுவினர் அனைவரும் விமானம் மூலம் மலேசியா சென்றடைந்த நிலையில், இன்றைய விழாவிற்கு தளபதி விஜய் மிகவும் நேர்த்தியான கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து வருகை தந்தார். அவர் மைதானத்திற்குள் நுழைந்தபோது எழுந்த ஆரவாரம் மலேசியாவையே அதிர வைத்தது.
அந்த விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ, ஆரம்பத்திலிருந்தே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். அவர் பேசியதாவது
“என்னோட அண்ணன், என்னோட தளபதி! தளபதி எங்களுக்கொரு எமோஷன். நான் உதவி இயக்குநராக இருந்தபோதே என் உழைப்பை மதித்து, ‘கதை இருந்தால் சொல்லுங்க, படம் பண்ணலாம்’ என்று சொன்னவர் அவர். 50 படங்கள் முடித்த ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு உதவி இயக்குநருக்கு இப்படி ஒரு வாய்ப்பு தருவது சாதாரணமான விஷயம் இல்லை. என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம் என்னுடைய விஜய் அண்ணன்தான்.”
வழக்கமாக விஜய் தான் மேடையில் குட்டி ஸ்டோரி சொல்லுவார். ஆனால், இன்று அட்லீ தனது அண்ணன் பாணியிலேயே ஒரு கதையைச் சொல்லி அனைவரையும் மெல்ட் ஆக்கினார்:
“வாழ்க்கையில் மூன்று விதமான மனிதர்கள் வருவார்கள். சிலர் இலை மாதிரி, காற்று அடித்தால் பறந்துவிடுவார்கள். சிலர் கிளைகள் மாதிரி, ஒரு கட்டத்தில் உடைந்து போவார்கள். ஆனால், தளபதிக்கு பின்னால் வேர் போல ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது!”
பேசி முடித்ததும் அட்லீ உணர்ச்சிப் பெருக்கில் மேடையிலிருந்து ஓடிச் சென்று விஜய்யைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இந்தத் தருணத்தைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் பெரும் முழக்கமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.





