யாழ்.காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!
வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபாட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது வழித்தட அனுமதி ,நேர அட்டவணை தொடர்பில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அத்துமீறலை எதிர்த்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினால் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கதில் காரைநகர் சிற்றூர்தி சங்கத்திற்கு பேரூந்து உரிம மாற்றம் மேற்கொள்ளும் பொழுது சங்க உறுப்பினர்களுக்கிடையில் அறிய படுத்தி வழித்தடத்தில் இருப்பவர்களுக்கிடையில் வழித்தட அனுமதி விற்கப்படுவது சங்கத்தின் யாப்புசார் வழமையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் வழித்தடத்தில் அல்லாத அராலி பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வழித்தட அனுமதி பத்திரத்தினை விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பில் விற்பனை செய்வதற்கு முதலே வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு கடிதமூலம் அறியபடுத்தியும் சபை நடவடிக்கை எடுக்கபடவில்லை. இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆளுநருக்கும் அறிய படுத்தி நடவடிக்கை எடுக்கபடவில்லை என ஏற்கனவே குறித்த சங்கத்தினர் காரைநகரில் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினர் நேரடியாக காரைநகரிற்கு வருகை தந்து சங்கத்துடன் எதுவித சந்திப்புக்களையும் நடாத்தாது பேரூந்தினை ஓட அனுமதியளித்துள்ளனர்.
இதனை கண்டித்து யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகம் முன்பாக ”வயிற்றில் அடிக்காதே, வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையே நடைமுறையை மாற்றாதே, ஆளுநரே எமக்கு தீர்வு வேண்டும், சங்கத்தின் ஒற்றுமையை பிரிக்காதே, தன்னிச்சையான செயற்பாட்டினை உடன் நிறுத்து ” என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆளுநர் அலுவலகம் முன் பேரணியாக நடந்து வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆளுநர் சார்பில் வருகை தந்த ஆளுநர் அலுவலக அதிகாரியிடம் மகஜர் ஒன்றினை பேரூந்து சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.
தொடர்ந்து இது தொடர்பில் யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கங்களின் இணையத்தின் தலைவர் கெங்காதரன் குறித்த காரைநகர் சிற்றூர்தி சங்கம் நீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடைமுறைக்கு வரும் முன்னரே செயற்பட தொடங்கிவிட்டது. இளவாலை சங்கம் ,மாதகல் சங்கம் ,காரைநகர் சங்கம் இந்த மூன்று வழித்தடத்திற்கும் அவர்களே நேர அட்டவணையை உருவாக்குகின்றார்கள் .
இதே வேளை நேர கண்காணிப்பாளர்களையும் சங்கமே மேற்கொள்கின்றது. இந்நிலையில் முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பல்வேறு நியதிச்சட்டங்களை கொண்டு வந்தாலும் எமது சங்க நடைமுறையையும் ஏற்றே செயற்பட்டார்.
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தொடர்பில் பல விடயங்களில் எமக்கு அதிருப்தி உள்ளது. இதற்கு தீர்வு ஒன்றினை இன்று மாலைக்குள் வழங்குவதாக ஆளுநர் சார் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆகவே இது குறித்து தொடர்நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாம் அடுத்த கட்டத்தினை நோக்கி மாவட்டரீதியாக செயற்படவேண்டிய சூழல் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.