சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு கோரிக்கை
நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர் தாயகம் எங்கும் நாளைய தினம் ஒரு கரிநாளாக பிரகடனப்படுத்தி பல போராட்டங்கள் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் கரிநாள் எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
பிரித்தானியர்கள் 1948 பெப்பிரவரி 4 ஆம் திகதி இந்த நாட்டை ஒரு சிங்கள தேசிய வாதத்திடம் கையளித்ததில் இருந்து தமிழர்களை பொறுத்தவரை இந்த நாளை தொடர்ச்சியாக ஒரு கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
பல்லின மக்கள் வாழுகின்ற சூழ்நிலையில் நாட்டினுடைய சிங்கள தேசியவாதிகளான ஆட்சியாளர்கள் ஏனைய மக்களை அடக்கி அடிமைப்படுத்தி வருகின்ற நிலமையினால் இந்த நாளை சிறுபான்மை மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்கின்றனர்.
இந்த நாடு தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு முன்னிலையாக வரவேண்டிய நாடு துரதிர்ஷ்டவசமாக இந்த சிங்கள தேசிய ஆட்சியாளர்கள் தங்களுடைய நலனுக்காக முன்னிலைப்படுத்தி கொண்டு செல்வதால் இந்த நாடு வளர்ச்சி பாதையில் இருந்து பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த நிலைமையிலே பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்கள் இந்த நாளை சுதந்திர நாளாக கருதி அவர்கள் கொண்டாடினாலும் அந்த மக்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே வடக்கு கிழக்கில் நடக்கும் கரிநாள் நிகழ்வு சிங்கள மக்களுக்கு பொருத்தமாக அமைகிறது எனவே இந்த நிலைமைகளை சிங்கள தேசம் விளங்கி கொண்டு அடிப்படை பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றி அதனை ஒரு சமஷ்டி கட்டமைப்பாக மாற்றி இந்த நாட்டிலே இருக்கின்ற பல்லின மக்கள் சம உரிமையுடன் சுயநிர்ணயத்துடன் அவர் அவர் அனுபவிக்க கூடிய அந்த சட்டத்தை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்
அவ்வாறு முன் வருகின்ற பட்சத்தில் மட்டும் தான் இந்த நாட்டை கட்டியொழுப்பலாம். இங்கே அடிப்படை காரணமாக இருப்பது இந்த அடிமை சாசனம் தமிழர்கள் தான் நசுக்கப்படுகிறார்கள் என்ற மமதையில் இந்த ஆட்சியாளர்கள் இருப்பார்களாக இருந்தால் இந்த நாடு மீண்டும் ஒரு படுகுழியில் தள்ளப்படும் ஆகவே இந்த நிலைமைகளை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
1949 கல்லோயா திட்டம் தொடக்கம் 2009 கிபிலோயா திட்டம் வரைக்கும் தமிழ் மக்களுடைய தேசம் குறிவைக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு அந்த தேசம் அழிக்கப்படுகின்றது. ஒற்றையாட்சி கட்டமைப்பு தான் தமிழ் தேசத்தை அழிக்கின்றது எனவே இந்த கட்டமைப்பை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.





