பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதம் ; UN அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு
பாலஸ்தீன பகுதியை பல்லாண்டு காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதம் என்றும் அது விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நாவின் அனைத்துலக நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அறிவுரையாக வழங்கப்படும் ஒன்று. ஏனெனில், அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பிரகடனம் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பிரகடனத்தை பொய்களின் அடிப்படையிலான ஒன்று என்று இஸ்ரேல் வர்ணித்தது. ஆனால், அதையே பாலஸ்தீன அமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதத்தால் உலக அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில், அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை வெளியாகியுள்ளது.
இது இஸ்ரேலின் உள்நாட்டிலும் அரசதந்திர ரீதியில் நெருக்குதலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை அன்று பாலஸ்தீன நாடு அமைவது இஸ்ரேல் உயிர்த்திருப்பதற்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்று கூறியுள்ளனர். அத்துடன், அதற்கு எதிராகவும் மன்றத்தில் வாக்களித்துள்ளனர்.
“பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்வது சட்டவிரோதமானது என இந்த நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.
“இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளது,” என்று ஹேக்கிலுள்ள அனைத்துலக நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நவாஃப் சலாம் கூறினார்.அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் புதிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் புதிய குடியிருப்பு நடவடிக்கைகளை நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அனைத்துலக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த பரிந்துரை குறித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, அனைத்துலக நீதிமன்றத்தின் பரிந்துரை பொய்களின் அடிப்படையிலான ஒன்று எனக் கூறினார்.இந்த வழக்கில் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை ஆக்கிரமிக்கப்பட்ட, கிழக்கு ஜெருசலம் உட்பட்ட, பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் கொள்கைகள், நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக நீதிமன்றம் தனது பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அனைத்துலக நீதிமன்றம் ஒருவார விசாரணையை மேற்கொண்டது. ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையின் இந்தக் கோரிக்கையை பல நாடுகள் ஆதரித்தன.இந்த விசாரணையில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.