காஸாவில் உணவு விற்பனைக்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல் ராணுவம்
காஸாவில் உள்ள மக்களுக்கு உணவு விற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை இஸ்ரேலிய ராணுவம் விலக்கி உள்ளது.
ராஃபா நகரில் சண்டை நீடித்து வருவதால் அனைத்துலக மனிதாபிமான உதவிகள் தடைபட்டு இருக்கும் நிலையில் இஸ்ரேலில் இருந்தும் மேற்குக் கரையில் இருந்தும் உணவுப்பொருள்கள் காஸாவைச் சென்று அடைவதற்கான வழி மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
பழங்கள், காய்கறிகள், பால் மாவு போன்றவற்றை இஸ்ரேல், பாலஸ்தீன விநியோகிப்பாளர்களிடம் இருந்து காஸா வர்த்தகர்கள் மீண்டும் வாங்க இஸ்ரேலிய ராணுவம் பச்சைக்கொடி காட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய சில நாள்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக காஸா மக்கள் கூறினர்.
எகிப்தில் இருந்து காஸாவுக்குள் நுழையும் வழியான ராஃபாவில் சண்டை நடப்பதால் காஸா மக்களுக்குத் தேவையான பொருள்களை இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன வர்த்தகர்களிடமே வாங்கிக்கொள்ள இஸ்ரேலிய ராணுவம் அனுமதி அளித்து உள்ளது.
சண்டை காரணமாக எல்லை அடைபட்டதால் ஐநா உதவிகள் தேங்கின.அதனைத் தொடர்ந்து அனைத்துலகக் கண்டனத்துக்கு இஸ்ரேல் ஆளானது.இதற்கிடையே, இஸ்ரேல் வான்வழியாக நடத்திய தாக்குதலில் பலர் இறந்தனர்.இந்நிலையில், காஸாவில் உள்ள வர்த்தகர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் தொலைபேசி வழி பேசியதாக காஸா வர்த்தக சங்கத் தலைவர் அயத் அபு ரமதான் தெரிவித்தார்.
மேற்குக் கரையில் இருந்தும் இஸ்ரேலிடம் இருந்தும் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள அப்போது ராணுவம் அனுமதி அளித்ததாகவும் அவர் கூறினார்.
பொருள்களை வாங்கவும் காஸாவுக்குள் கொண்டு சேர்க்கவும் ஒத்துழைக்கத் தயார் என்று ராணுவம் கூறியதாகவும் அயத் குறிப்பிட்டார்.