காஸாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 13 பாலஸ்தீனர்கள் பலி!
காஸாவில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியின் மீதும் குடியிருப்பு கட்டடத்தின் மீதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் எனப் பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘வாஃபா’ சனிக்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தது.இந்தத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர் என்றும் அது சொன்னது.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது எட்டுப் பேர் காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபாலியாவில் இருக்கும் ‘ஹலிமா அல்-சதியா’ பள்ளியில் அகதிகள் கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள் என ‘வாஃபா’ கூறியது.
இது தொடர்பாக இஸ்ரேலியத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் இருந்த பயங்கரவாதிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் காஸாவின் வடக்குப் பகுதியில் முன்பு ‘ஹலிமா அல்-சதியா’ பள்ளியாக இருந்த வளாகத்திற்குள் ஹமாஸ் அமைப்பின் நிலையம் இருந்ததாகவும் தெரிவித்தது.மற்றொரு சம்பவத்தில், காஸாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராத் முகாமில் இருக்கும் குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி போராக வெடித்தது. ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றதாகவும் சுமார் 250 பேரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் இஸ்ரேலியத் தரப்பு தெரிவித்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின்மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில், 40,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அவ்வட்டாரத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். பசி, பஞ்சம் ஏற்பட்டது. உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல்மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றை அந்நாடு மறுத்தது.
குறைந்தது 1.9 மில்லியன் காஸா பகுதி மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது. சிலர், தாக்குதலுக்கு அஞ்சி 10 இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் நிறுவனம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.