போர் நிறுத்த விதிமுறைகளின்படி 30 கைதிகளின் உடல்களை காசாவிற்கு திருப்பி அனுப்பிய இஸ்ரேல்
 
																																		காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10ம் திகதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட 28 பணய கைதிகளில் 17 பேரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. இன்னும் 11 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்கள் ஹமாஸிடம் உள்ளன.
இதனை தொடர்ந்து ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் (ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட) பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகிறது.
இந்நிலையில், 30 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
        



 
                         
                            
