தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் குற்றச்சாட்டு
தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருக்கிறது இஸ்ரேல். காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் பாலஸ்தீனியர்கள் அலறுகின்றனர்.
காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் வடக்கு காஸா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பாலஸ்தீனியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக போர்களில் பயன்படுத்த தடைக்கு ஆளாகியிருக்கும் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் ஏவுவதாகவும் அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு, சர்வதேச சமூகத்திடம் முறையிடுகின்றனர்.
Phosphorus bombs used by lsrael in my village! #Gaza pic.twitter.com/Dm21uPCDnU
— Muhammad Smiry 🇵🇸 (@MuhammadSmiry) October 9, 2023
வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பவை பெரும் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்பவை. ஆழ்ந்த தீக்காயங்களுடன் மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை. இவற்றை போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை உள்ளது. தடையை மீறி வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க்குற்றத்திலும் சேரும்.
இதற்கு முன்னதாகவும் லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கிறது. அப்போது அது குறித்து மறுப்பு தெரிவித்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் அவற்றை ஒப்புக்கொண்டுள்ளது. அதே போன்று இப்போதும் இஸ்ரேல் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துமெனில், போர் குற்றம் உள்ளிட்ட கூடுதல் பிரச்சினைகளுக்கும் அந்நாடு ஆளாகக் கூடும்.