இஸ்ரேல்- நிரம்பி வழியும் பிணவறைகள்… ஐஸ்க்ரீம் வாகனங்களில் சேகரிக்கப்படும் சடலங்கள்!
காசா மீதான இஸ்ரேலின் கோரத்தாக்குதல் காரணமாக அங்கே பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிய, ஐஸ்க்ரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அக்.7 அன்று நடத்திய கோரத்தாக்குதலுக்கு, இஸ்ரேல் நின்று நிதானமாக பழிவாங்கலை மேற்கொண்டு வருகிறது. காசாவை நிர்மூலமாக்கும் இஸ்ரேல் வான் படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதலால் அங்கே அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றனர். உயிர்ப்பலி அதிகமானதில் சடலங்களை சேகரித்து வைப்பதற்கான வசதியின்றி காசா மக்கள் தடுமாறுகின்றனர்.
பல்வேறு ஊர்களிலும் மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலிய போர் விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு கல்லறைகளும் தப்பவில்லை. இதனால் அங்கே சடலங்களை நல்லடக்கம் செய்வதும் சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையில் அதிகரிக்கும் சடலங்களை சேகரிக்க இதர உபாயங்கள் இல்லாததில், ஐஸ்க்ரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
போரின் கோர முகங்களில் ஒன்றாக இந்த சம்பவங்கள் குறித்த செய்தி வெளியாகி உலக நாடுகளை அதிர செய்துள்ளன. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் குடியிருப்புகள் மேல் குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். கடந்த வியாழன் ஒரு நாளில் மட்டும் சுமார் 6,000 முறைகள் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது பறந்து குண்டுகளை வீசியதாக இஸ்ரால் ராணுவம் பெருமையுடன் தெரிவித்தது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 2,600 என்பதை தாண்டியுள்ளது. காசா குடிமக்களின் அடிப்படைத் தேவைக்கான குடிநீர் வரத்தை இஸ்ரேல் துண்டித்ததோடு, மருத்துவம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கிடைப்பதில் போர் காரணமாக தடங்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.