பதிலடி கொடுக்கும் நோக்கில் ஹமாஸ் படைக்கு எதிராக தீவிர போர் நடவடிக்கையில் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதலை தொடுத்த ஹமாஸ் படையினருக்கு எதிராக தீவிர போர் நடவடிக்கைகளை அந்நாடு முடுக்கி விட்டுள்ளது.
ஹமாஸ் பாலஸ்தீனியர்கள் – இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடையிலான மோதல் 4வது நாளாக இன்று தீவிரமடைந்துள்ளது. யூதர்களின் முக்கிய தினமான அக்டோபர்7 அன்று காஸா பிராந்தியத்திலிருந்து, ஹாமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு திடீர்த் தாக்குதலை தொடங்கியது. 20 நிமிடங்களில் பல்லாயிரம் ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலின் வான் பாதுகாப்பை உடைத்தது. வான் வழியாக மட்டுமன்றி நிலம், நீர் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர், இஸ்ரேல் குடிமக்களில் 100க்கும் மேலானோரை கடத்திச் சென்றனர்.
காஸா மீது பதிலடி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிரான மனிதக் கேடயமாக அந்த இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் பயன்படுத்தினர். மொஸாட் உளவு முன்னறிவிப்பில் தோல்வி, தாமதமாக எதிர்வினையாற்றியது என இஸ்ரேல் தனது தரப்பில் தடுமாற்றத்தோடு தாக்குதலை தொடங்கியது. எனினும் காஸா பகுதியில் ஹமாஸ் படையினரை பூண்டோடு அழிக்க இஸ்ரேல் முடிவு செய்திருப்பதை அதன் வெறிகொண்ட தாக்குதல்கள் புலப்படுத்துகின்றன.
ஹமாஸ் தனது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தியதன் 3வது நாளில் அதிகாரபூர்வமான போரைத் தொடங்குவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.காஸா பகுதியில் வாழும் குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்திய அவர், தற்போதைக்கு ஹமாஸ் மீது மட்டுமே தாக்குதலை நடத்துகிறோம் என்று அறிவித்தார். ஆனால் இஸ்ரேல் படைகளின் போர் நடவடிக்கைகள் அதற்கு மாறாக இருந்தன.
காஸாவில் ஹமாஸ் பதுங்கு தளங்களை குறிவைத்த தாக்குதல் என்ற பெயரில், குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் அப்பகுதியில், பெண்கள், குழந்தைகள் என பலர் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர். சர்வதேச சமூகத்தின் பார்வைக்காக, ஹமாஸ் படையினர் மீது மட்டுமே தாக்குதல் என அறிவித்துவிட்டு, காஸாவில் வசிக்கும் அப்பாவி மக்கள் மீதும் இஸ்ரேல் கொடும் தாக்குதலை தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன.