மத்திய காசாவில் உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 4 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் மூன்று மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இது அண்மையில் மருத்துவ கட்டமைப்பின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஐந்தாவது தாக்குதல் என கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட பஞ்சத்தில் விளிம்பில் வாழும் மக்கள், உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என கவலை தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், மாவு ஆலைகள், மாவை சேமித்து வைக்கும் கிடங்குகள் மற்றும் தொழில்துறை பேக்கரிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் செயல்பட முடியவில்லை.
மற்றொரு பக்கம் இஸ்ரேல், காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் வழக்கம்போல இதனை மறுத்துள்ளது. காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பெறகூட போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடி போர்நிறுத்தம் தேவை என ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.