சிரியா-பாலைவனப் பகுதியில் IS பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 9 வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு!
IS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் IS தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 135க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் உலகை உலுக்கியுள்ள நிலையில் IS தீவிரவாதிகள் அடுத்ததாக சிரியாவில் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிரியாவில் குடியிருப்பு பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை இழந்துவிட்ட IS பயங்கரவாதிகள், அங்கிருந்து நகர்ந்து அங்குள்ள பாலைவனப் பிரதேசத்தில் பதுங்கி உள்ளனர். அதிலிருந்து அவ்வப்போது வெளியேறி வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் பொதுமக்களையும், பாதுகாப்புப் படையினரையும் கடத்தியும் சென்று விடுகின்றனர்.
மேலும் பாலைவனப்பகுதியில் வளரும் விலை உயர்ந்த காளான் மற்றும் உணவுப்பொருட்களை சேகரிக்க செல்லும் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் வடக்கு சிரியாவின் பாலைவனப் பகுதியில் உணவுப்பொருட்களை சேகரிப்பதற்காக நேற்று பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இந்த வாகனம் எதிர்பாராத விதமாக அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ISபயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகளும் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இதில் உயிர் தப்பிய 3 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. அண்மைக்காலமாக IS தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.