அடிக்கடி கொட்டாவி விட்டால் ஆபத்தா?.. வெளியான காரணம்
கொட்டாவி ஏன் வருகிறது என்றும் அடிக்கடி கொட்டாவி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கொட்டாவி விடும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதையெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம்.
கொட்டாவி என்ற இந்த வார்த்தையை வாசித்த நீங்களும் இப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இந்த பதிவை படிப்பீர்கள் சரியா மக்களே..
ஏன் கொட்டாவி வருகிறது?
நம் வாயை பெரிதாகத் திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பது தான் கொட்டாவி என கூறுகிறோம் . கொட்டாவி விடும்போது நுரையீரல் நன்கு விரிவடையும் அதிக ஆக்சிஜன் உள்ளே இழுக்கப்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் . நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் சோர்வாக இருக்கும் போது தான் கொட்டாவி வரும்.
கொட்டாவி ஆனது சோர்வு ,சலிப்பு, தூக்கமின்மை ,மன அழுத்தம், அதிக வேலைப்பளு, ஆர்வமின்மை போன்ற காரணங்களால் வரக்கூடியது. மேலும் இது தொற்று செயல் என்றும் கூறப்படுகிறது. சோர்வாக இருக்கும் போது உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் கொட்டாவி விடும்போது அதிக ஆக்சிஜன் கிடைப்பதோடு ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது.
ஒருவர் கொட்டாவி விட்டால் அதைப் பார்ப்பவருக்கும் ஏன் வருகிறது தெரியுமா?
ஆராய்ச்சியின் படி ஒருவர் கொட்டாவி விட்டால் அதை பார்க்கும் ஒரு சிலருக்கு தான் கொட்டாவி வரும் என்றும் ஒரு சிலருக்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது .ஏனென்றால் எம்பதி என்று சொல்லக்கூடிய உணர்ச்சி இருப்பவர்களுக்கு மட்டுமே ஒருவரைப் பார்த்து அவர்களுக்கும் கொட்டாவி வரும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. உதாரணமாக ஒருவருக்கு ஏதேனும் கவலை இருந்தால் அந்த நபரின் நிலையில் இருந்து பார்த்து அவருக்கு ஆறுதல் கூறும் எண்ணம் ஏற்படும் அல்லவா அந்த மனநிலை உள்ளவர்களுக்கு தான் ஒருவர் விடும் கொட்டாவி பார்த்தால் அவருக்கும் வருமாம்.
அடிக்கடி கொட்டாவி விடுவதால் ஏற்படும் ஆபத்துகள்;
ஒரு சிலர் எப்போதுமே கொட்டாவி விடுவார்கள் இது உடல் நல குறைபாட்டிற்கான அறிகுறியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் .உடல் சோர்வு இல்லாமல் கொட்டாவி வருகிறது என்றால் கல்லீரலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் .மேலும் கல்லீரல் பலவீனம் இருந்தாலும் அடிக்கடி கொட்டாவி வரும்,
சமீப ஆய்வின்படி உடலில் வெப்பநிலை சரியாக வைத்துக் கொள்ளாமல் இருந்தாலும் கொட்டாவி ஏற்படும் என கூறுகின்றனர். மேலும் மூளை அலர்ஜி மற்றும் ஸ்ட்ரோக் போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மூளையின் தண்டில் ஏற்படும் புண்ணின் காரணமாகவும் அதிக கொட்டாவியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கூட அதிக கொட்டாவியை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
கொட்டாவி விடும் போது தண்ணீர் வருவது ஏன்?
கொட்டாவி விடும் போது அதிகப்படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பி தூண்டப்பட்டு கண்ணீர் வருகிறது .இதனால் தான் கொட்டாவி விடும்போது கண்களை மூடி கொள்கிறோம்.
ஆகவே எப்போதாவது கொட்டாவி விடுவது பிரச்சனை இல்லை ஆனால் அடிக்கடி தொடர்ந்து விடும் போது அதன் காரணத்தை அறிந்து சரி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கமின்மையால் கொட்டாவி வருகிறது என்றால் அதை நீங்களே சரி செய்து கொள்ளலாம். மேலே கூறிய காரணங்கள் மற்றும் சோர்வு இல்லாமல் வந்தால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.