தொல்பொருள் திணைக்களமா? சிங்கள தொல்பொருள் திணைக்களமா?
தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படுவதாக தொடர்ச்சியாக தமிழ் மக்களால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய இரண்டு வருட பதவிக்காலத்திற்கு தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம பதிவாளர் சங்கைக்குரிய வெண்டருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ இரத்தினபால உபாலி நாயக்க தேரர் தலைமையிலான குழுவில், ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம பதிவாளர், சங்கைக்குரிய கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக தேரர், கலாநிதி கவ்வெவ விமலகாந்த தேரர், பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, கௌரவ பேராசிரியர் ஜகத் வீரசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி, களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பேராசிரியர் மங்கள கட்டுகம்பொல, பேராதனை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன, களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் துறை, மூத்த பேராசிரியர் மலிங்கா அமரசிங்க, மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவா, கௌவ பேராசிரியர் சமித மாணவடு, கலாநிதி ரோஸ் சோலங்க ஆராச்சி, களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் துறையின் கலாநிதி ஸ்ரீயானி ஹத்துருசிங்க, ருஹுணு பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்பொருள் துறை பேராசிரியர் விஜேரத்ன போஹிங்கமுவ, கலாநிதி பி.டி. நந்தேவா, கலாநிதி காமினி விஜேசூரிய, பேராதனை பல்கலைக்கழக தொல்பொருள் துறை கலாநிதி அருண ராஜபக்ச மற்றும் கட்டிடக் கலைஞர் ஹேமந்த குமார பாலச்சந்திர ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
வடக்கு, கிழக்கில காணப்படும் தமிழர்களின் சைவ ஆலங்கள், கிராமிய வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட தமிழர்களின் வரலாற்று தொன்மை வாய்ந்த இடங்களை தொல்பொருள் திணைக்களம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய இடங்களாக மாற்ற முயற்சிப்பதாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே குற்றம்சாட்டி வருகின்றர். இந்த குற்றச்சாட்டுக்களில் நியாயம் இல்லாமலும் இல்லை, அதேவேளை, வடக்கு, கிழக்கில் தமிழ் சைவர்கள் உரிமை கோரும் சில மத வழிபாட்டு இடங்களுக்கு சிங்கள மக்களும் உரிமை கோரி வருகின்றர், இதன் பின்னணியிலும் தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்பு காணப்படுகிறது என்பதே தமிழ் மக்களின் மிகப்பிரதானமான குற்றச்சாட்டு. இவ்வாறான பின்னணியிலேயே ‘பெயரளவிலேனும் ஒரு தமிழர் இன்றி’ இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச திணைக்களங்கள், ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழர் விரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாகவே முன்னெடுத்து வந்திருக்கின்றன, அதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு ஒருபோதும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நியமிக்கப்படுவதில்லை. அப்படியே அத்தி பூத்தாற்போல் நியமிக்கப்படுபவர் நிச்சியமாக அரசாங்க சார்பு நிலையை கொண்டவராகவே இருப்பார்-இதுதான் வரலாறு.
இலங்கையில் பிரதானமான இரு இனங்களான தமிழ், சிங்கள இனங்கள் எப்போதும், ஏதோ ஒரு வகையில் துருவப்பட்டே இருக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய சிங்களத் தலைவர்கள், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையை முன்னிறுத்தி, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை எப்போதுமே அடக்கியாளவே முற்பட்டுள்ளனர். அவர்கள் ஒருபோதும் இந்த மக்களையும் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதி சமவுரிமையை வழங்க எண்ணியதே இல்லை, இன்று வரை அந்த நிலைமை தொடர்கிறது. இந்த சிங்கள பேரினவாத அரசின் செயற்பாடுகளுக்கு, அவர்களால் உருவாக்கப்பட்ட அரச திணைக்களங்கள் தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்பை வழங்கியே வந்திருக்கின்றன, அதிலும் தொல்பொருள் திணைக்களம் எப்போதும் சிங்கள பௌத்த சிந்தனையுடன் செயற்படத் தவறியதேயில்லை. அதன் சின்னத்திலேயே அந்த திணைக்களம் அதனை வெளிப்படுத்தியும் உள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இலங்கைப் போன்ற ஒரு நாட்டில் தொல்பொருள் திணைக்களம் என்பது அவசியமான ஒன்று, புராதன சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் என்பவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த திணைக்களத்தையே சாரும். எனினும் அந்த திணைக்களம் அவ்வாறு செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மாத்திரம் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்த வருட நடுப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.
“2500 வருட வரலாறு கொண்ட எமது நாட்டில், எங்கு தோண்டினாலும் புராதனச் சின்னங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். மலசலகூடத்திற்காக குழியொன்றை தோண்டினால்கூட, இந்தப் பிரச்சினை ஏற்படலாம். தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் இடங்களை நாம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும். அதேநேரம், தற்போது வாழும் மக்களையும் அது பாதிக்காத வகையில் எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சிங்கள- பௌத்த தொல்பொருள் மாத்திரம் இங்கு தொல்பொருட்களாக கருதிவிட முடியாது. அது இன, மதங்களுக்கு அப்பாற்பட்டது.” என அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அவ்வாறுதான் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றதா? அவ்வாறு செயற்படுமானால் விமர்சனங்களுக்கு வாய்ப்பே இல்லையே?
2009 ஆம் ஆண்டு முற்பட்ட காலப்பகுதியில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் அந்த திணைக்களத்தின் செயற்பாடுகள் பெரியளவில் இருக்கவில்லை. எனினும் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அரச படை மற்றும் பௌத்த தேரர்களின் ஒத்துழைப்புடன் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு, தமிழ் சைவர்களுக்கு சொந்தமான பல இடங்களை பௌத்த மதத்துடன் தொடர்புடைய இடங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை வெளிப்படையாகவே இந்த திணைக்களம் முன்னெடுத்தது/முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
வெடுக்குநாறி மலை, குருந்தூர்மலை, உள்ளிட்ட சைவத் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த இடங்களை பௌத்தமயமாக்கும் முயற்சியை, பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள் முன்னெடுத்தவேளை, தொல்பொருள் திணைக்களம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதேத் தவிர நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. அது மாத்திரமல்ல, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரப்புரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று வெடியரசன் கோட்டை எனப் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலமே அறிவித்திருந்தார், எனினும் அவருக்கு எவ்வித பதிலும் இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் கிடைக்கவில்லை.
தொல்பொருள் திணைக்களம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய இடங்களாக அடையாளப்படுத்தும் இடங்களில் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைக்கும் முயற்சிக்கு இராணுவம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். இது திட்டமிட்ட சிங்கள, பௌத்த மயமாக்கம் என்பதினாலேயே தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்கள், சிவில் அமைப்புக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாகவே தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து அந்த மக்களின் வரலாற்றை, வரலாற்று தளங்களை அழிக்க முயற்சிக்கும் ஒரு அரச நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட அனைவருமே சிங்களவர்களாக காணப்படும் பட்சத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அச்சம் கொள்வதில் நியாயம் இருக்கிறதல்லவா?
எவ்வாறெனினும், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, தமிழ் பேசும் அதிகாரிகள் இந்த குழுவிற்கு நியமிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார், மேலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்த ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு தமிழர்கள் மற்றும் இரண்டு முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் குறிப்பிடப்படுகிறது, எனினும் அது நடைமுறைக்கு வரும் வரையில் இதுத் தொடர்பில் நம்பிக்கைக்கொள்ள முடியாது.
தொல்பொருள் திணைக்களம் என்பது ஒரு நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுத் தளங்கள், இடங்கள், கட்டிடங்களை பேணிப் பாதுகாப்பதை தலையாகக் கடமையாக கொண்டு செயற்பட வேண்டுமேத் தவிர, பெரும்பான்மையாக வாழும் இனத்திற்குக் சார்பாக செயற்பட்டு, எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையாக காணப்படும் மக்களின் வரலாற்று இடங்கள் மற்றும் தளங்களை அழித்து அல்லது அதன் வரலாற்றை மாற்றியமைத்து பெரும்பான்மை மக்களுக்குரியதாக அவற்றை மாற்றியமைக்கும் பணியை முன்னெடுக்கக்கூடாது. அவ்வாறாறு செயற்படுவது தொல்பொருள் திணைக்களமாக இருக்க முடியாது, அவ்வாறு செயற்படும் அதிகாரிகளும் அந்தப் பணியை செய்வதற்கு தகுதியானவர்கள் அல்ல.
ராதா





