பிரித்தானிய அரசியலில் சலசலப்பு : 500 மில்லியன் டொலர் கிரிப்டோ கையாடல் அம்பலம்
சர்வதேச வங்கி முறையைத் தவிர்த்து, பொருளாதாரத் தடைகளை முறியடிப்பதற்காக ஈரான் மத்திய வங்கி சுமார் 507 மில்லியன் டொலர் பெறுமதியான ‘டெதர்’ (Tether) கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தியுள்ளதாகப் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கிரிப்டோ ஆய்வு நிறுவனமான எலிப்டிக் (Elliptic) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ஈரான் தனது நாட்டு நாணயமான ‘ரியால்’ (Rial) மதிப்பை நிலைப்படுத்தவும், சர்வதேச வர்த்தகத்தை முன்னெடுக்கவும் இந்த முறையைப் பின்பற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரித்தானியாவின் ‘ரீஃபார்ம் யுகே’ கட்சித் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பகிரங்கமாக ஆதரிக்கும் இந்தக் கிரிப்டோகரன்சியை ஈரான் பயன்படுத்தியுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரேஜின் கட்சிக்கு பெரும் நிதி வழங்கும் கிறிஸ்டோபர் ஹார்போர்ன், டெதர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என டெதர் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், இதுவரை 3.4 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
மறைமுகமாக கிரிப்டோ கணக்குகள் மூலம் ஈரான் முன்னெடுக்கும் இத்தகைய நகர்வுகள், சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.





