அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தனது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால் அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த நீர்வழிப்பாதை குறித்து தற்போது கவலை அதிகரித்துள்ளது.
“மின்சாரம் இல்லாமல் ஈரான் முழுமையாக பாதிக்கப்படும்” என்று தெஹ்ரான் (Tehran) நகரைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பெர்சியனிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் (Israel) இரவோடு இரவாக ஈரான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன. டிமோனா (Dimona) நகரத்திற்கு அருகிலுள்ள அணுசக்தி நிலையம் இந்த தாக்குதலின் இலக்காக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஆகிய நாடுகளும் ஏவுகணைத் தாக்குதல்களை தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளன.




