உள்ளமைப்பு மீது தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுப்போம் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
தன்மீது எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு, ஈரான் இஸ்ரேலுக்குள் ஏவுகணைகளைப் பாய்ச்சியதை அடுத்து, அந்நாட்டின் எச்சரிக்கை வந்துள்ளது.ஈரானின் உள்ளமைப்பு மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி கூறியுள்ளார்.இதற்கிடையே, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேலிய ராணுவம் அதிக நெருக்குதலைக் கொடுத்து வருகிறது.
பெய்ரூட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைமையகத்தின் தளபதி கொல்லப்பட்டதாக அது அக்டோபர் 8ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.சுஹைல் ஹுசெய்ன் ஹுசெய்னியின் மரணம் உறுதியானால், ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்களையும் தளபதிகளையும் கொல்வதன் மூலம் பேரளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் இஸ்ரேல் உத்தியின் விளைவாக அது கருதப்படும்.
கடந்த ஓராண்டாக காஸாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் சண்டையிட்டுவருகிறது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ருல்லாவைக் கொன்றது.அந்தத் தாக்குதல்களினால், ஈரானும் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் மத்திய கிழக்கில் முழுவீச்சில் ஏற்படக்கூடிய சண்டைக்குள் இழுக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்ற நிலை பல்லாண்டுகளாக நிலவுகிறது. லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளால், தெஹ்ரான் சென்ற வாரம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
ஈரானின் எண்ணெய் வளாகங்கள் தாக்கப்படலாம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக அமெரிக்கச் செய்தித்தளமான ‘எக்சியோஸ்’ தெரிவித்தது.அவ்வாறு நடந்தால், கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உலகளவில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கக்கூடும்.