கொடூரமான கொலைகளை முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான் அரசு
ஈரானில் அண்மை காலமாக நடைபெற்ற போராட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சனிக்கிழமை கருத்து தெரிவித்த அவர் போராட்டங்களின் போது பலர் உயிரிழந்ததாகவும், சிலர் மனிதாபிமானமற்ற, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த உயிரிழப்புகளுக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் அமைப்பான HRANA வெளியிட்டுள்ள தகவலின்படி, போராட்டங்களுக்கு அரசாங்கம் வன்முறையாக பதிலளித்ததில் 3,090 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சில ஆர்வலர் குழுக்கள் இதைவிட அதிக எண்ணிக்கையை கூறி வருகின்றன.
ஆனால், ஈரானில் இணைய சேவை கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால், சரியான தகவல்களை உறுதி செய்வது கடினமாக உள்ளது.
இந்த போராட்டங்கள் டிசம்பர் 28ஆம் திகதி பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்து தொடங்கின. பின்னர் அவை, உச்ச தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளாக மாறின.
இதற்கு பதிலளித்த ஈரானிய அரசு, இந்த போராட்டங்களை வெளிநாட்டு எதிரிகளால் தூண்டப்படும் கலவரங்கள் என கூறியுள்ளது.
இதற்கிடையில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இவை பிபிசி பெர்சியன் மற்றும் பிபிசி வெரிஃபை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட் பிளாக்ஸ் தெரிவிப்பதன்படி,
சனிக்கிழமை ஈரானில் இணைய இணைப்பு சாதாரண அளவின் 2 சதவீதம் மட்டுமே செயல்பட்டது.
அண்மைய நாட்களாக போராட்டங்கள் குறைந்ததாக தகவல்கள் வந்தாலும், இணைய தடையால் நிலவரம் தெளிவாக தெரியவில்லை.
இதனிடையே, தென்மேற்கு ஈரானின் ஷிராஸில் வசிக்கும் ஒரு பெண், பிபிசி பெர்சியனிடம், “பாதுகாப்புப் படையினர் இன்னும் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து செல்கின்றனர். ஆனால், நிலைமை தற்போது கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய போராட்டக்காரர்களை ‘தொடர்ந்து போராடுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், பாதுகாப்புப் படையினர் மக்களை கொன்றால் இராணுவ தலையீடு ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த உச்ச தலைவர் கமேனி, ட்ரம்பை ஒரு “குற்றவாளி” என்றும், ஈரானில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், “அமெரிக்காவின் இலக்கு ஈரானை விழுங்குவது” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை டிரம்ப் இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை, “ஈரான், அமெரிக்க தளங்களை குறிவைக்கும் தாக்குதல்களுக்கு தயாராக இருக்கலாம்”
என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
அத்தகைய தாக்குதல் நடந்தால், மிக வலுவான பதில் கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேலும், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தில், அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளன.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன..





