சவூதியிலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது ஈரான் தாக்குதல்!
சவூதி, ரியாத்தில் Riyadh உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன.
தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக் கிழமை வான்வழி தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துவருகின்றது.
இஸ்ரேல் மட்டுமல்லாது அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள கத்தார் மற்றும் பஹ்ரைன் தலைநகரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மீது ஏவுகணைகள்,
ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதை அமெரிக்க வான் தடுப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கி அழித்து வருகின்றன. இதனால், துபாய், தோஹா, அபுதாபி மற்றும் மனாமா உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன.
ஈரான் தாக்குதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.





