புலம்பெயர் உறவுகளே முதலீடு செய்ய முன்வாருங்கள்: வடக்கு ஆளுநர் பகிரங்க அழைப்பு
அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.
போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் இத்தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று (21.01.2026) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் நாம் கூடியுள்ளோம்.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பரந்தன் மண் மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கும் ஒரு ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றது. 1954 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கூட்டுத்தாபனமாக்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் இரசாயனத் தேவையைப் பூர்த்தி செய்த ஒரு பாரிய அச்சாணியாகத் திகழ்ந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
ஆனையிறவு உப்பளமாக இருக்கலாம், இன்று அடிக்கல் நடப்படும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம் – இவை அனைத்தும் வடக்கின் பொருளாதாரத்தின் உயிர் நாடிகள். இவற்றை மீள இயக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இத்தொழிற்சாலை இயங்கிய காலத்தில், குளோரின், கொஸ்டிக் சோடா மற்றும் ஹைதரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை எமது மண்ணில், எமது மக்களின் உழைப்பிலேயே உற்பத்தி செய்தோம். ஆனால், கடந்த 40 வருடங்களாக இவற்றையெல்லாம் நாம் டொலர் கொடுத்து இறக்குமதி செய்து வந்தோம். இன்று அந்த நிலைமை மாற்றியமைக்கப்படப் போகின்றது.
இனிவரும் காலங்களில் எமது தேவை போக, எஞ்சியவற்றை ஏற்றுமதி செய்து டொலரை உழைக்கும் மையமாகப் பரந்தன் மாறப்போகின்றது.
எதிர்காலத்தில் இத்தொழிற்சாலை அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது.
இவ்விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன். நீங்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத் தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
எத்தனையோ எம்மவர்கள் எமது மண்ணில் முதலீடு செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். வாருங்கள், கைகோருங்கள்.
வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று இந்தப் பரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ளது.
இது எமது வடக்கு மாகாண இளையோருக்கு, குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்குப் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும், என்றார்.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியன பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு, நடுகை செய்யப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
வரவேற்புரையை நிறுவனத்தின் தலைவர் ச.நேசராஜா நிகழ்த்தினார். தொடர்ந்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளைப் பிரதேசச் செயலாளர் த.பிருந்தாகரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேளமாலிகிதன், முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





