இலங்கையில் இன்ஸ்டாகிராம் விருந்து சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 57 பேர் கைது

இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பமுனுகம பொலிஸ் நிலையத்தால் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் கைது நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பமுனுகம பொலிஸ் பிரிவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்து நடத்தப்படுவதாக பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதற்கமைய, நடத்தப்பட்ட சோதனையின் போது, விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஐஸ் மற்றும் கஞ்சா உட்கொண்டதாகவும், ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இங்கு 7 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.