தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குமாறு வலியுறுத்து!
“அரசியல் உறுதிமொழிகளைவிட தேசிய பாதுகாப்பே மிக முக்கியம். அதனை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயல்படுமாறு கோருகின்றோம்.
வடக்கில் காணி விடுவிப்பின்போதும் உரிய பாதுகாப்பு மீளாய்வு அவசியம். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் உள்ள இடங்களாயின் அவற்றின் உரிமையாளர்களுக்கு மாற்று காணி அல்லது உரிய இழப்பீட்டை வழங்க முடியும்.”எனவும் நளின் பண்டார குறிப்பிட்டார்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் உரிய வகையிலேயே முடிவுகளை எடுத்துவருகின்றது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.





