உலகிலேயே மிகவும் ஆபத்து வாய்ந்த மீன்கள் குறித்து வெளியான தகவல்
மீன்களிலே பலவகை உண்டு. சிறியது முதல் பெரியது வரை, பிரானா முதல் எலக்ரிக் ஈல் வரை ஆபத்து நிறைந்த பல மீன் வகைகளும் உண்டு. அவற்றை பற்றித்தான் இன்று பார்க்க போகிறோம்.
பப்பர் மீன் தான் உலகிலேயே விஷம் அதிகம் உள்ள மீன்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த மீனிடம் டெட்ரடோடாக்ஸின் என்ற விஷம் உள்ளது. இது சயனைட் விஷத்தை காட்டிலும் 1200 மடங்கு அதிக விஷத்தன்மை உடையது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பப்பர் மீன்கள் கேரளா, கர்நாடகா பகுதிகளில் கிடைக்கிறது.
ஜப்பானில் இந்த மீனை வெறும் த்ரில்லான உணர்வை பெறுவதற்காகவே உண்கிறார்கள். ஜெப்பானில் இம்மீனை எப்படி சமைக்க வேண்டும் என்பதற்கு படிப்பு உண்டு. இருப்பினும் சமைக்கும்போது ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்த உணவை உண்பவருக்கு நிச்சயம் மரணமே!
கல் மீன் பார்ப்பதற்கு கல் போலவேயிருக்கும். இது வெறும் கல் தானே என்று நினைத்து தொட்டால், தன்னில் வைத்திருக்கும் விஷத்தை நம் மீது செலுத்தி விடும். இதனால் மிகவும் வலி, வீக்கம், மரணம் கூட நிகழும். இம்மீனை பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நிறைய காணலாம். இந்த மீனை சீனா, ஜெப்பான் போன்ற நாடுகளில் விரும்பி உண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் சிங்க மீன்கள் உடலில் நிறைய முட்களை கொண்டது. எதிரிகளை தாக்கும் போது அந்த முட்களை விரித்து தாக்கும். அப்போது பார்ப்பதற்கு சிங்கம் போல காட்சி தருவதால் இதை பசிபிக் சிங்க மீன் என்று கூறுவார்கள். இதில் சிவப்பு சிங்க மீனே மிகவும் அரிதானதாகும். இம்மீனின் தண்டு முள்ளை மட்டும் நீக்கிவிட்டால், இம்மீனும் உண்பதற்கு ஏற்றதேயாகும். வெறும் 30 நிமிடத்தில் தன் நஞ்சினை பயன்படுத்தி 20 மீன்களை சாகடிக்கும் திறன் கொண்டது.
ஸ்டிங்ரே மீனில் அதனுடைய விஷம் வால் பகுதியிலேயே இருக்கும். இது பசுபிக் பெருங்கடலில் காணக் கூடியதாகும். இந்த மீன் தட்டவடிவத்தை கொண்டு காணப்படும். கடல்படுக்கையில் புதைந்து காணப்படும் யாரேனும் மிதித்துவிட்டாலே தாக்கும் தண்மை கொண்டது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதியில் ஸ்டிங்ரே மீனை உண்கிறார்கள். இந்தியாவில் கோவா போன்ற இடங்களில் இது உண்ணப்படுகிறது.
எலக்ரிக் ஈல் மீன் வகையை உண்ணலாம். ஆனால் அதை உண்பதை தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறார்கள். எலக்ட்ரிக் ஈலால் மனிதர்களை கொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் 800 வால்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகும். எனினும் இம்மீன்கள் முரட்டுத்தன்மை கொண்டது கிடையாது. எதிரிகளிடமிருந்து தன்னை காத்து கொள்ளவே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரானா மீன்வகை உண்ணக்கூடியதேயாகும். இம்மீனின் சுவை எல்லா மீன்களை போலவேயிருக்கும் என்று கூறுகிறார்கள். பைரானா பெரிதாக மனிதர்களை தாக்கியதில்லை என்றும் இதன் கடி முதலையின் கடியை காட்டிலும் மூன்று மடங்கு வலி மிகுந்ததாய் இருக்குமாம். இம்மீன்கள் ரத்த வாடையை மோப்பம் பிடித்து வரக்கூடியதாகும். இம்மீனுக்கு அதன் வலுவான பற்களும், தாடையுமே பலமாகும்.
எத்தனையோ வகையான அறியப்படாத மீன்கள் கடலிலே இருக்கின்றது. அதன் தன்மையை புரிந்துக்கொள்ளாமல் சாப்பிட முற்படுவது மிகவும் ஆபத்தாகும். சிலர் விஷ மீன்களை உண்பதை த்ரில் உணர்விக்காக செய்தாலும், அதை சரியாக செய்யாவிட்டால் ஆபத்தில் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி – கல்கி