இந்தோனேசியா மற்றும் ரஷ்யா கடற்படைகள் ஜாவா கடலில் முதல் கூட்டுப் பயிற்சி
இந்தோனீசியாவும் ரஷ்யாவும் நவம்பர் 4ஆம் திகதி, ஜாவா கடலில் முதல் கூட்டுக் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.இந்தோனீசியக் கடற்படை இதைத் தெரிவித்தது.
இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ரஷ்யாவுடன் அணுக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்த உறுதியளித்த நிலையில் இந்தக் கூட்டுப் பயிற்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனீசியா நீண்டகாலமாக அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதால் அதன் ஓர் அங்கமாக எந்த நாட்டுடனும் பிணைப்பை ஏற்படுத்த முயல்வதாக அதிபர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 4 முதல் 8ஆம் திகதி வரை சுரபாயா நகருக்கு அருகே ஜாவா கடலில் கூட்டுப் பயிற்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் இடத்திற்கு நவம்பர் 3ஆம் திகதி ரஷ்யாவின் நான்கு போர்க்கப்பல்கள் சென்று சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இருநாட்டுக் கடற்படைகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்திற்கு உகந்த வகையில் கூட்டுப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
ஜகார்த்தாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
இந்தக் கூட்டுப் பயிற்சி, எந்த நாட்டுடனும் நட்பு பாராட்ட இந்தோனீசியா ஆர்வமுடன் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.அதேநேரத்தில் ரஷ்யா இதன்மூலம் தனக்கு இன்னும் நட்பு நாடுகள் இருப்பதை உலகிற்குத் தெரிவிப்பதாகக் கருதலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஜூலை மாதம் மாஸ்கோ சென்றிருந்த அதிபர் பிரபோவோ ரஷ்யா தமது சிறந்த நட்பு நாடு என்று கூறினார்.