மருத்துவ காரணங்களுக்காக இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பதவி ராஜினாமா

இந்தியத் துணை அதிபர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலகயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 74 வயதான அவர், தமது பதவி விலகல் கடிதத்தை இந்திய அதிபரிடம் ஜூலை 21ஆம் தேதி வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.உடல்நலக் குறைவு, மருத்துவ காரணங்களால் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவில் 14வது துணை அதிபராகப் பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் அவர் திடீரென பதவி விலகியுள்ளது மத்திய அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, துணை அதிபரின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சுக்கு அதுகுறித்து முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் ஜூலை 21ஆம் தேதி காலை கூடியது. மாநிலங்களவைக் கூட்டத்தொடருக்கு வழக்கம்போல் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கிய நிலையில், அன்றிரவே பதவி விலகல் கடிதம் அளித்திருப்பது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்றும் அவர் தலைமையில் திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட பங்கேற்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
இதையடுத்து, குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைத் துணை அதிபராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தமது பதவியைத் துறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.