இலங்கை வந்தடைந்த இந்திய கப்பல்! கரை தட்டிய கப்பலை மீட்டுச் செல்வதில் தாமதம்
பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.
மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை கரை தட்டி உள்ளது.
இதன் போது குறித்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் குறித்து இந்தியாவின் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும்,கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைவாக குறித்த நிறுவனமும் கடற்படையும்,சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்புப் பணியகம் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை கொண்டு சென்ற பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற போதே இலங்கை கடற்பரப்பில் கரை தட்டியது.
87 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கொள்கலன் தாங்கி எந்த வித பொருட்களும் அற்ற நிலையில் கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது.
இதன் போது கடல் பிராந்தியத்தில் வீசிய கடும் காற்று,அலையின் சீற்றம் காரணமாக குறித்த கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவை இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் 87 மீற்றர் நீளம் கொண்ட கொள்கலன் ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்திய கப்பல் ஒன்று பேசாலை நடுக்குடா பகுதியை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மற்றும் மீட்டுச் செல்ல வந்த கப்பல் ஆகியவற்றை பார்வையிட மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
எனினும் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்த நிலையில் தற்போது வரை மீட்டுச் செல்வதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது