முன்னாள் அதிபரைக் கொல்ல அழைப்பு விடுத்த இந்திய வம்சாவளி சிங்கப்பூரருக்கு சிறைத்தண்டனை

2023ஆம் ஆண்டில் அப்போதைய அதிபரான ஹலிமா யாக்கோப் கொல்லப்பட வேண்டும் என்று இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டு, நீதிபதி ஒருவரைக் கத்தியால் குத்த விரும்புவதாக மிரட்டிய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விக்ரமன் ஹார்வி செட்டியார் என்ற ஆடவர், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மரண தண்டனை குறித்து வருத்தமடைந்து சமூக ஊடகப் பதிவை வெளியிட்டிருந்தார்.
அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட பிறகு அவர், அந்த நேரத்தில் தனது வழக்கை விசாரிக்கும் நீதிபதியை கத்தியால் குத்த விரும்புவதாக காவல்துறை அதிகாரியிடம் கூறி மிரட்டியிருந்தார்.
பிப்ரவரி 12ஆம் தேதியன்று மூன்று அலைக்கழிப்புக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 34 வயதான விக்ரமனுக்கு 10 மாதங்கள் மற்றும் 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரம் இல்லாமல் பொய் சொன்னதையும் சிங்கப்பூரரான அவர் ஒப்புக்கொண்டார்.
பல அலைக்கழிப்பு உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
அரசாங்க துணை வழக்கறிஞர்கள் கெவின் யோங், ஷான் லிம் ஆகியோர் விக்ரமன் தனக்கு மனநலக் கோளாறு இருந்ததாகக் கூறியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், மனநலக் கழகம் அவரை இரண்டு முறை பரிசோதித்ததில், அவரது கூற்றுக்கு ஆதாரமில்லை என்பதைக் கண்டறிந்தது.