கடற்கொள்ளையர்களிடமிருந்து 19 பாகிஸ்தானியரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட மீனவ கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்து 19 பாகிஸ்தானியர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சோமாலியா கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சரக்கு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள் ஆகியவற்றை சிறைபிடித்து பணம் கேட்டு மிரட்டுவதை கடற்கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதையடுத்து பல்வேறு நாடுகளின் கடற்படை சேர்ந்த கப்பல்கள் இந்த பகுதியில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் சிறைபிடிக்க முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக அவசரகால தகவலை மீன்பிடிக் கப்பலை சேர்ந்தவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் கடந்த சில நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் ஐஎன்எஸ் சுமித்ரா கடற்படை கப்பல் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.
அப்போது கடற்கொள்ளையர்களை விரட்டியடித்த கடற்படையினர், அதிரடியாக மீன்பிடி கப்பலில் சிறைபிடிக்கப்பட்டு இருந்த 19 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த அந்த கப்பலில் வேறு யாரேனும் கடற்கொள்ளையர்கள் இருக்கின்றனரா என்பதை உறுதி செய்த பின்னர் அந்தக் கப்பல் பத்திரமாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 36 மணி நேரத்தில் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் மேற்கொள்ளும் 2வது மீட்பு முயற்சி இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 17 மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட கப்பலை இந்திய கடற்படை மீட்டிருந்தனர்.இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது போன்ற பெரிய அளவிலான கப்பல்களைச் சிறைபிடித்து, கூடுதல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.