இந்திய வருமான வரி அடுக்குகள் 2025: தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம்

இந்தியாவில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் சனிக்கிழமை (1) தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நிதி நிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனிநபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால் அவர் இனி வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.
அதன்படி, மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள்.இது, இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும்.
தற்போதைய வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறின.
இன்னொரு சலுகையாக, மூத்த குடிமக்களுக்கான வரிவிலக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போதும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.