உக்ரைனுக்கு விற்கப்படும் இந்திய வெடி மருந்துகள் – அதிருப்தி வெளியிட்டுள்ள ரஷ்யா
இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா மீது ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மற்றும் சுங்கத் தரவுகளின்படி, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக இத்தகைய பரிமாற்றங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக நிகழ்ந்துள்ளன. இந்திய ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்குபவர்கள் அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அங்கீகரிக்கப்படாத ஆயுத மாற்றங்கள் நடந்தால் எதிர்கால விற்பனை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
இந்திய ஆயுதங்கள் உக்ரைனுக்கு விற்கப்பட்டதா அல்லது நன்கொடையாக வழங்கப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இது குறித்து ரஷ்யா, இந்தியாவிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து ரஷ்யாவின் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதுதான் ஆயுத பரிமாற்றங்கள் பற்றிய விவரங்கள் முதல் முறையாக வெளிவருகின்றன. இது தொடர்பான கேள்விகளுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் பதிலளிக்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஜனவரி மாதம், ஒரு செய்தியாளர் சந்திப்பில், உக்ரைனுக்கு இந்தியா பீரங்கி குண்டுகளை அனுப்பவில்லை அல்லது விற்கவில்லை என்று கூறினார்.
உக்ரைன் பயன்படுத்திய வெடி மருந்துகளில் இந்திய வெடி மருந்துகளின் அளவு மிக மிக குறைவு என்றும், போருக்குப் பிறகு உக்ரைன் இறக்குமதி செய்த மொத்த ஆயுதங்களில் இது 1%-க்கும் குறைவானது என்றும் ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும், செக் குடியரசும் இந்திய வெடி மருந்துகளை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளன. இந்திய அரசுக்கு சொந்தமான யந்த்ரா இந்தியா எனும் நிறுவனத்தின் வெடிமருந்துகளை உக்ரைன் பயன்படுத்துகிறது.
இதனிடையே, நிலைமையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், ஐரோப்பவுக்கான விநியோகத்தைத் தடுக்க இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் நேர்காணல் செய்யப்பட்ட 20 பேரைப் போலவே, இந்த அதிகாரியும் தனது பெயரை வெளிப்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். அதேநேரத்தில், உக்ரைன், இத்தாலி, செக் குடியரசு ஆகியவற்றின் பாதுகாப்பு அமைச்சகங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.