இந்தியாவுக்கு 20% முதல் 25% வரை வரி விதிக்கலாம் ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை ; டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருதரப்பு வரிவிதிப்புக்கான காலக்கெடு முடிவதற்கு இரு நாள்களுக்கு முன்பே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூன் மாத இறுதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால், இந்தியாவுக்கு 20% முதல் 25% வரை வரிவிதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமது வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தானுடனான போரை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்ததாக மீண்டும் கூறினார்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா மீது இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது என்றும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு, அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்ததைக் கருத்தில் கொண்டு, இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும்,என அதிபர் டிரம்ப் கூறியதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
வேறு எந்த நாடும் அமெரிக்கா மீது இந்த அளவுக்கு அதிக வரிகளை விதித்ததில்லை. இவ்வாறு செய்யக்கூடாது என்று தமது ஐந்து நாள் ஸ்காட்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்புகையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டிரம்ப்.
இந்நிலையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சில காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ஜமைசன் கிரீர் CNBC ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நான்கு நாள்கள் நீடித்தது.எனினும் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய வர்த்தகக் குழுவால் வாஷிங்டனில் எந்தவொரு தீர்வையும் காண முடியவில்லை. இதையடுத்து, அமெரிக்க குழு ஒன்று, ஆகஸ்ட் இரண்டாம் பாதியில் இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக பிடிஐ செய்தி ஊடகம் தெரிவித்தது.